கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில், மூன்றாவது பெண் குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான தாய் ஒருவர், 2 மாத குழந்தையை கொலை செய்து கால்வாயில் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சனோஜ்குமார் மற்றும் அவரது மனைவி பிரியங்கா (32) ஆகியோர், தற்போது பல்லாரி மாவட்டம் சண்டூர் அருகே உள்ள தோரணகல்லு கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சண்டூர் அருகேயுள்ள ஜிந்தால் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்குப் பிறந்த இரு பெண் இருக்கும் நிலையில் இரண்டரை மாதங்களுக்கு முன்பு மூன்றாவது பெண் குழந்தையும் பிறந்தது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியங்கா, கடந்த சனிக்கிழமை காலை தனது 2 மாத பெண் குழந்தையை காணவில்லை என தெரிவித்தும், யாரோ கடத்தி சென்றதாகவும் சண்டூர் போலீசில் புகார் அளித்தார். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, குழந்தை மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடத்தல் குறித்த ஆதாரங்களும், சாட்சியங்களும் இல்லாமல் விசாரணை சிக்கலாக இருந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், அதிகாலையில் பிரியங்கா குழந்தையை தூக்கிக்கொண்டு செல்லும் காட்சி மற்றும் திரும்பும்போது குழந்தையில்லாமல் வருவது போன்றக் காட்சிகளை கண்டுபிடித்தனர். இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் பிரியங்காவிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தையை யாரும் கடத்தவில்லை என்றும், மூன்றாவது பெண் குழந்தையாக பிறந்ததற்கான ஏமாற்றத்தால், தானே கொலை செய்ததாகவும் பிரியங்கா ஒப்புக்கொண்டார்.
பின்னர், போலீசார் தந்த தகவலின் அடிப்படையில், குழந்தையின் சடலத்தை அருகிலுள்ள கால்வாயில் இருந்து மீட்டனர். இந்த சம்பவம் சண்டூர் மற்றும் சுற்றுப்புறங்களில் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரியங்காவை கைது செய்த போலீசார், குழந்தைக் கொலை சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
