உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில், பிறந்து சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த பெண் குழந்தையை, தெய்வத்தின் அவதாரம் எனக் கருதி கிராம மக்கள் வழிபாடு நடத்தி வரும் சம்பவம் பெரும் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஹல்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் கஞ்சன். இவரது மனைவி ராதாவுக்கு கடந்த புதன்கிழமை காலை 11 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அன்றைய தினமே மாலை நேரத்தில் அக்குழந்தை உயிரிழந்தது. இதனால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.
குழந்தையை அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்தபோது, தாய் ராதா ஒரு திடுக்கிடும் தகவலைக் கூறியுள்ளார். குழந்தை பிறப்பதற்கு முன்பும், அது இறந்த பின்பும் தனது கனவில் ‘நாடாவு தாம்’ (Nadaau Dham) தேவி தோன்றியதாக அவர் தெரிவித்தார். அதாவது அங்குள்ள ஒரு தெய்வத்தின் பெயரை அந்தப் பெண் கூறினார். தனது மகளாகப் பிறந்து மறைந்தது அந்த தேவிதான் என்றும், அந்தத் தெய்வம் தனது வீட்டிலேயே தங்குவதற்கு இடம் கேட்பதாகவும் அவர் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
தாயின் பேச்சைக் கேட்டு நெகிழ்ந்து போன குடும்பத்தினர், இறந்த குழந்தையைத் தெய்வமாகவே கருதி வீட்டிற்குள் ஒரு இடத்தில் வைத்தனர். அக்குழந்தைக்குப் பால் நிவேதனம் செய்து, மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகளைத் தொடங்கினர்.
தகவல் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு குவியத் தொடங்கினர். தற்போது அந்த வீட்டில் இடைவிடாது பஜனைகளும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. மக்கள் அந்த இடத்தைத் தெய்விகத் தலமாகக் கருதி காணிக்கைகளைச் செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து முறையான மருத்துவத் தகவலோ அல்லது சுகாதாரத் துறையின் விளக்கமோ இதுவரை வெளிவரவில்லை. இருப்பினும், மூடநம்பிக்கை காரணமாகக் கூட்டம் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மூடநம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
