மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள திவா பகுதியில், தெரு நாய் கடித்த 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 17-ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நிஷா ஷிண்டே என்ற சிறுமியை தெரு நாய் ஒன்று தோள் மற்றும் கன்னத்தில் கடித்தது. இதனைத் தொடர்ந்து, சிறுமிக்கு மாநகராட்சி மருத்துவமனையில் வெறிநாய் கடி தடுப்பூசிகள் (Anti-Rabies Vaccine) உரிய கால அட்டவணைப்படி செலுத்தப்பட்டு வந்தன.
இடையில் உடல்நலம் தேறிய சிறுமி, கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி தனது பிறந்தநாளையும் உற்சாகமாகக் கொண்டாடினார். இந்நிலையில், இறுதித் தவணை தடுப்பூசி செலுத்திய மறுநாளே சிறுமிக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்பட்டதோடு, விசித்திரமான நடத்தைகளும் தென்பட்டன.
உடனடியாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். உரிய மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்பட்ட நிலையிலும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக மாநகராட்சி மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
