திமுக ஆட்சியின் குறைகளைத் தேர்தல் மேடையிலேயே தைரியமாகச் சுட்டிக்காட்டிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் உடலில், மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் ஆவி புகுந்துவிட்டதாகத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கிண்டலாகத் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது,

திமுக கூட்டணி தற்போது உடைந்துபோன தேங்காயைப் போலச் சிதறிக் கிடக்கிறது. மக்கள் நலனில் சற்றும் அக்கறை இல்லாத இந்தக் கூட்டணிக்கு மக்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம். ராகுல் காந்தியும், முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் கூடப் பிரச்சாரம் செய்யவில்லை. ராகுல் வடக்கிலும், ஸ்டாலின் தெற்கிலும் தனித்தனியாகச் சுற்றி வருகின்றனர். இவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவ்வப்போது உண்மைகளைப் பேசுகிறார். அண்மையில் சேலத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி கூட்டத்திலேயே, முதல்வர் முன்னிலையிலேயே தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளும், போதைப்பொருள் கலாசாரமும் பெருகிவிட்டதாகப் பேசினார். மேடையிலேயே உண்மையை உரக்கச் சொன்ன அவரது தைரியத்தைப் பாராட்டுகிறோம்.

திமுக ஆட்சிக்கு எதிராகப் பிரேமலதா இவ்வளவு தைரியமாகப் பேசுகிறார் என்றால், அதற்கு மறைந்த விஜயகாந்தின் ஆன்மா கொடுத்த தைரியமே காரணம். சொல்லப்போனால், பிரேமலதாவின் உடலில் கேப்டன் விஜயகாந்தின் ஆவி புகுந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். அதனால்தான் திமுகவின் வன்கொடுமைகளை அவர் அங்கேயே பேசிவிட்டார் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் முன்னதாக, திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரம் ஆகியவற்றைத் தவிர அண்ணன் ஸ்டாலின் மீது வேறு என்ன குற்றச்சாட்டைச் சொல்ல முடியும்?” எனப் பேசியிருந்தார். இந்தப் பேச்சு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதனை முன்வைத்து அண்ணாமலை தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.