மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், உணவு நச்சுப் பாதிப்பு அல்ல என்றும், அவர்களது உடலில் சக்திவாய்ந்த மருந்து கலந்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த அப்துல்லா என்பவர், கடந்த வாரம் தனது உறவினர்களுக்குப் பிரியாணி விருந்து அளித்துள்ளார். உறவினர்கள் சென்ற பிறகு, அப்துல்லா, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் தர்பூசணி சாப்பிட்டுள்ளனர். அடுத்த சில மணி நேரங்களிலேயே நான்கு பேருக்கும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒவ்வொருவராக உயிரிழந்தனர்.

இந்த மரணங்களுக்குத் தர்பூசணியே காரணம் என்ற செய்தி காட்டுத்தீயாகப் பரவியதால், சந்தையில் தர்பூசணி விலை அடியோடு சரிந்தது. இதனால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தனர். இறந்தவர்களின் உடல்களைப் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், சில திடுக்கிடும் உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். அதாவது  இறந்தவர்களின் மூளை, இதயம் மற்றும் சிறுகுடல் போன்ற உறுப்புகள் பச்சை நிறமாக மாறியிருந்தன. இது வழக்கமான உணவு நச்சு (Food Poisoning) பாதிப்பு அல்ல என்பது உறுதியாகியுள்ளது. மிக முக்கியமாக, அப்துல்லாவின் உடலில் ‘மார்ஃபின்’ (Morphine) எனப்படும் வலிமையான போதை மற்றும் வலி நிவாரண மருந்து கண்டறியப்பட்டுள்ளது.

உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (FDA), இந்த மரணங்களுக்கும் தர்பூசணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் மார்ஃபின் மருந்தை உட்கொண்டார்களா அல்லது தர்பூசணியில் யாராவது விஷம் கலந்து கொடுத்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் ரசாயன ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்த பிறகே முழுமையான உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.