மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில் சொகுசு கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு தாயும் அவரது 4 வயது மகனும் ஒருவரையொருவர் இறுக்கக் கட்டியணைத்தபடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வியாழக்கிழமை மாலை சுமார் 30 பயணிகளுடன் சென்ற அந்தச் சொகுசு கப்பல், திடீர் புயல் மற்றும் பலத்த காற்றினால் நிலைகுலைந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது. விபத்து நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு கப்பலின் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், கப்பலுக்குள் நீர் புகுவதைக் கண்டு பயணிகள் அலறியடிப்பதும், ஒரு தாய் தனது 4 வயது மகனுக்கு உயிர்காப்பு அங்கி (Life Jacket) அணிவித்து, அவனைத் தனது மார்போடு சேர்த்து இறுக்கக் கட்டியணைத்து அழுதுகொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது.

விபத்து நடந்து பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு, மீட்புக் குழுவினர் இருவரது உடல்களையும் மீட்டனர். அப்போது, அந்தத் தாய் தனது மகனை ஒரே உயிர்காப்பு அங்கிக்குள் வைத்து பிரியாத வண்ணம் அணைத்திருந்ததைக் கண்டு மீட்புப் பணியாளர்களே கலங்கினர். இந்த உருக்கமான காட்சியைக் கண்டு சம்பவ இடத்திற்கு வந்த மாநில அமைச்சர் ராகேஷ் சிங் கண்ணீர் விட்டு அழுதார்.

 

வானிலை மோசமடைந்த போதே கரைக்குத் திரும்புமாறு பயணிகள் கப்பல் ஊழியர்களிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், ஊழியர்கள் அதைப் பொருட்படுத்தாமல் ஆழமான பகுதிக்குச் சென்றதே இந்தக் கொடூர விபத்திற்குக் காரணம் என நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இதுவரை 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மாயமான மற்றவர்களைத் தேடும் பணியில் SDRF மற்றும் உள்ளூர் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என முதல்வர் மோகன் யாதவ் உறுதி அளித்துள்ளார்.