லக்னோ எகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது, மைதானத்தில் நடனமாடும் சியர் லீடர்களிடம் சில ரசிகர்கள் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தில் பவுண்டரி எல்லைக்கு அருகே உள்ள சியர் லீடர்கள் நடனமாடும் மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு சில ரசிகர்கள், போட்டியின் போது தொடர்ந்து சியர் லீடர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோக்கள் மற்றும் தகவல்களின்படி, ரசிகர் ஒருவர் ஒரு காகிதத்தில் தனது மொபைல் எண்ணை எழுதி, அதனை அங்கு நடனமாடிக் கொண்டிருந்த சியர் லீடர் ஒருவரை நோக்கிக் தூக்கி எறிந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சியர் லீடர்கள், அங்கிருந்த அதிகாரிகளிடம் தங்களுக்கு நேர்ந்த அநாகரீகமான நடத்தை குறித்து உடனடியாகப் புகார் அளித்தனர். இந்த விவகாரம் மைதானத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

விஷயம் சீரியஸானதை அடுத்து, மைதானத்தில் பாதுகாப்பிற்கு நின்றிருந்த பெண் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் உடனடியாக அந்த குறிப்பிட்ட கேலரி பகுதிக்கு விரைந்தனர். அங்கு சியர் லீடர்களை வம்புக்கு இழுத்த ரசிகர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகப் போலீஸார் கடுமையான எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுத்தனர். போலீஸார் அந்த வாலிபர்களைத் தட்டிக்கேட்கும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. உரிய நேரத்தில் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுத்த லக்னோ போலீஸாரை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 


இந்தியாவில் நடக்கும் பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகளில், பெண் ஊழியர்கள் மற்றும் சியர் லீடர்களின் பாதுகாப்பு மீண்டும் ஒருமுறை இந்த சம்பவத்தின் மூலம் கேள்விக்குறியாகியுள்ளது. மைதானங்கள் என்பது அனைவருக்கும், குறிப்பாக அங்கு பணிபுரியும் கலைஞர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மரியாதைக்குரிய இடமாக இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தவறிழைத்த ரசிகர்கள் மீது என்ன மாதிரியான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்த விரும்பத்தகாத சம்பவம் விளையாட்டு உலகைத் தாண்டி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.