நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் களம் கண்டு, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக நிரூபித்த அர்ஜுன் டெண்டுல்கரை பாராட்டி, அவரது தந்தையும் இந்திய கிரிக்கெட் உலகின் மாபெரும் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் நடப்பு சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாறினார் அர்ஜுன் டெண்டுல்கர். எனினும், இந்த சீசன் முழுவதும் லக்னோ அணியின் செயல்பாடு மோசமாக இருந்தபோதிலும், அர்ஜுனுக்கு பிளெயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படாமல் தொடர்ந்து பெஞ்சில் அமரவைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், லக்னோ அணியின் இந்த சீசனின் கடைசி லீக் போட்டியில் ஒருவழியாக அர்ஜுனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், பஞ்சாப் அணிக்கு எதிராக லக்னோ அணியின் மிகவும் சிக்கனமான பந்துவீச்சாளராக அசத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
View this post on Instagram
மகனின் இந்த சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு, சச்சின் டெண்டுல்கர் தனது சமூகவலைதள பக்கத்தில் அர்ஜுனுக்காக ஒரு நெகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, மிக நன்று அர்ஜுன்! இந்த முழு சீசன் முழுவதும் நீ உன்னை கையாண்ட விதம், எப்போதும் உனது திறமை மீது நீ வைத்திருந்த நம்பிக்கை, உன்னுடைய பொறுமை, கடின உழைப்பு மற்றும் தொடரின் கடைசி போட்டி வரை வாய்ப்புக்காகக் காத்திருந்தபோதும் நீ காட்டிய நேர்மறை எண்ணம் ஆகியவற்றை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
அர்ஜுனின் பந்துவீச்சு திறமையை விட, இந்த சீசன் முழுவதும் அவர் காட்டிய நிதானத்தையும், முதிர்ச்சியையும் பாராட்டி சச்சின் பதிவிட்ட இந்த உருக்கமான வரிகள் தற்போது இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
