சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 2,559 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேளாண் கல்லூரி, சட்டக்கல்லூரி மற்றும் 32 கோடியில் அமைக்கப்பட்ட மினி டைடல் பார்க் எனப் பல மெகா திட்டங்களைச் சிவகங்கை மண்ணிற்கு அர்ப்பணித்த அவர், “சிவகங்கை என்றாலே சிலிர்ப்புதான்” என வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் கீழடியின் பெருமைகளை நினைவு கூர்ந்தார்.
தமிழகத்தின் வளர்ச்சி பற்றி மத்திய அரசே பாராட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடியும் ஆளுநரும் அந்தத் தரவுகளைப் படித்துப் பார்க்க வேண்டும் எனச் சாடிய முதல்வர், தேர்தலுக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பிரதமர் வீசுவதாகக் காட்டமாகப் பதிலடி கொடுத்தார். மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு காலி செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய முதல்வர், ‘விக்சித் பாரத்’ திட்டத்தைத் திரும்பப் பெறத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், மீண்டும் அந்தத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்றும் உறுதி அளித்தார்.
அதேசமயம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் திட்டங்களையே காப்பியடித்துப் புதிய வாக்குறுதிகளாக அறிவிப்பதாகக் கேலி செய்த அவர், “மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும்” எனத் தன்னம்பிக்கையுடன் முழங்கினார். மக்களின் மகிழ்ச்சியும் தமிழகத்தின் வளர்ச்சியுமே தனக்கு முக்கியம் என நெகிழ்ச்சியுடன் பேசிய ஸ்டாலினின் இந்தப் பேச்சு, 2026 தேர்தலுக்கான வலுவான அஸ்திவாரமாகப் பார்க்கப்படுகிறது.
