ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவுக்கு இடையே பிரசவ வலியால் உயிருக்குப் போராடிய கர்ப்பிணிப் பெண்ணை, இந்திய ராணுவ வீரர்கள் பல கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

குப்வாரா மாவட்டத்தின் எல்லைப் பகுதியான கர்னாவில் உள்ள ஜப்தி பிஜல்தார் கிராமம் எப்போதும் பனி சூழ்ந்த பகுதியாகும். சமீபத்திய கடும் பனிப்பொழிவு காரணமாக, இந்தப் பகுதி வெளி உலகத் தொடர்பிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சாலைகள் பல அடி உயரத்திற்குப் பனியால் மூடப்பட்டிருந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

இந்நிலையில், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குத் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது. அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் முயன்றனர். ஆனால், கொனகப்ரா அருகே சென்றபோது ஆம்புலன்ஸ் வாகனம் கடும் பனியில் சிக்கிக்கொண்டது. அந்தப் பெண் வலியால் அலறித் துடிக்க, உயிருக்கு ஆபத்தான நிலை உருவானது.

இந்தத் தகவல் இந்திய ராணுவத்தின் துணைப் பிரிவு தலைமையகமான டாங்தாரில் உள்ள 104-வது படைப்பிரிவு வீரர்களுக்குத் தெரியவந்தது. உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள், ஒரு ஸ்ட்ரெச்சரில் அந்தப் பெண்ணைப் படுக்க வைத்து, கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் தங்கள் தோள்களிலேயே சுமந்து கொண்டு பல கிலோமீட்டர் தூரம் நடந்தனர்.

வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்குப் பெண்ணைச் சுமந்து வந்த நிலையில், அங்கிருந்த ஒரு ஜே.சி.பி இயந்திரம் பனியை அகற்றிப் பாதையைச் சீரமைத்தது. இதன் மூலம் மீண்டும் ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்பட்டது. ராணுவம், காவல்துறை, சுகாதாரத் துறை மற்றும் உள்ளூர் மக்களின் கூட்டு முயற்சியால் அந்தப் பெண் பாதுகாப்பாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சரியான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றிய இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் மனிதநேயச் செயலை அந்தப் பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.