சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்ற நோக்கில், பொது இடங்களில் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், உயிருக்கு ஆபத்தான முறையிலும் இளைஞர்கள் மேற்கொள்ளும் சாகசங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெரிய வணிக வளாகத்தில் (Mall) எஸ்கலேட்டர் இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர், படிக்கட்டுகளில் ஏறிச் செல்லாமல், எஸ்கலேட்டரின் கைப்பிடிப் பகுதியை  வெளிப்புறமாகப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி மேலே செல்கிறார்.

அவர் மேலே செல்லச் செல்ல, கீழே விழுந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் இல்லாமல் சிரித்துக் கொண்டே இந்தச் செயலில் ஈடுபடுகிறார். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி அவரைத் தடுக்க ஓடி வருவதற்குள், அந்த இளைஞர் மேலே சென்றடைந்தார். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்பு குறித்தோ, மாலின் விதிமுறைகள் குறித்தோ கவலைப்படாமல், ‘ரீல்ஸ்’ எடுப்பதிலேயே அவர் குறியாக இருந்தார்.

இந்த வீடியோ ‘எக்ஸ்’  தளத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்தது. ஆனால், அந்த இளைஞரின் செயலுக்குப் பாராட்டுகளை விடக் கண்டனங்களே குவிந்து வருகின்றன.

“இவர்களைப் போன்றவர்களுக்குச் சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

“அவர் பாதியில் தொங்கிக் கொண்டிருக்கும்போது யாராவது அவசர காலப் பொத்தானை அழுத்தியிருக்க வேண்டும்” என மற்றொருவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

“இத்தகைய முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுபவர்களின் மொபைல்களைப் பறிமுதல் செய்து, பொது இடங்களில் மன்னிப்புக் கேட்க வைக்க வேண்டும்” என்றும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

பொது இடங்களில் இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் வணிக வளாக நிர்வாகத்தினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுபோன்ற ஆபத்தான சாகசங்கள் மற்றவர்களையும் தவறாக ஊக்குவிக்கும் என்பதால், சமூக வலைதள நிறுவனங்களும் இத்தகைய வீடியோக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.