திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி அதிமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இருப்பினும், கடந்த சில காலமாக அதிமுக நிகழ்ச்சிகளில் அவர் தலைகாட்டி வந்தாலும், கட்சித் தலைமை கே.சி.வீரமணிக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாக நிலோபர் தரப்பு அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தனது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த முக்கிய முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
நிலோபர் கபில் அதிமுகவில் இருந்தபோது தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். அவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் அமைச்சரான கே.சி.வீரமணிக்கும் இடையே நீண்டகாலமாகப் பனிப்போர் நிலவி வந்தது. கட்சிக்குள் ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்த நிலோபர், ஏற்கனவே திமுகவின் முக்கியப் புள்ளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது பிப்ரவரி 14-ஆம் தேதியைத் தனது அரசியல் மாற்றத்திற்கான நாளாகக் குறித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தாவல் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
