முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற மகளிர் மற்றும் பொதுமக்கள் நலனை நோக்கிய இலவச மருத்துவ முகாம் திட்டம், தமிழகமெங்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், ரத்த பரிசோதனை, சர்க்கரை, இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் அனைத்துத் தரப்பினருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் 1,256 மேம்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் மகளிர் மற்றும் குழந்தை மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் பரிசோதனைகள் நடைபெறுவதால், கிராமப்புற மக்களுக்கும் நவீன சிகிச்சை சுலபமாக கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில், பிரபல நடிகை சமீரா ரெட்டி இந்த திட்டத்தை பாராட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். “9 வருடங்களுக்கு முன்பு எனக்கு முடி உதிர்தல் பிரச்சனை ஏற்பட்டபோது தான் உடல்நலத்தை முக்கியமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன். தமிழ்நாட்டில் பல பெண்கள், உடல்நிலை மிகவும் மோசமான பிறகுதான் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே நோயை கண்டறிதல் மிக அவசியமான ஒன்று. இது பல உயிர்களைக் காக்கும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ள விதம் மிகப் பிரமிப்பளிக்கக்கூடியது. எந்தவொரு பொருளாதாரச் சிக்கலின்றி, இலவசமாக அனைத்து தரப்பினருக்கும் இந்த சேவை வழங்கப்படுவதும், கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அரசின் முனைப்பை வெளிப்படுத்துகிறது” என நடிகை சமீரா ரெட்டி புகழ்ந்து கூறியுள்ளார்.

இந்த திட்டம் மக்களிடம் மருத்துவம் குறித்த விழிப்புணர்வையும், பாதுகாப்பையும் சேர்த்து வழங்கும் மிகச் சிறந்த முயற்சி எனவும், தமிழகத்தின் ஆரோக்கிய எதிர்காலத்திற்கு இது ஒரு முக்கியமான கட்டமாக இருக்கும் என்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.