சமூக வலைதளங்களில், ஒரு பள்ளி செல்லும் சிறுமியை வடமாநில தொழிலாளி ஒருவர் கடத்திச் செல்வதாக கூறப்படும் சிசிடிவி வீடியோ வேகமாக பரவி வருகிறது.
இந்தக் காணொளி சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் எடுத்ததென பரப்பப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களிடையே குழப்பம் மற்றும் அச்சம் ஏற்பட்டு வருகிறது. இதுபற்றித் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.
அதில், “இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல. இது கடந்த மார்ச் மாதம் முதல் இந்திய அளவில் பரவி வரும் பழைய வீடியோ. இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவமல்ல என்பது குறித்து தமிழக போலீசும் உறுதியாக மறுத்துள்ளது. மக்கள் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் இவ்வாறு போலியான தகவல்களை பரப்புவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்” என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, உண்மைக்கு உறுதியில்லாத வீடியோக்களை பகிர்வது தவிர்க்கப்பட வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
