மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரியில் எதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இருக்கக்கூடிய சர்வதேச பள்ளி நிறுவனரான சிவசங்கர் பாபா 2011ஆம் ஆண்டு அந்த பள்ளியில் படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக  புகார் எழுந்தது. இது தொடர்பாக பத்தாண்டுகளுக்கு பிறகு பாலியல் புகாரில் 2021ஆம் ஆண்டு சிவசங்கர் பாபாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றசாட்டுகள் தெளிவற்று இருப்பதாகவும், அரசியல் மற்றும் ஊடகங்கள் அழுத்தத்தின் காரணமாக  தன் மீது வழக்கு செய்யப்பட்டதாக வாதம் முன்வைக்கப்பட்டது. தனக்கு எதிராக புகார் அளித்த மாணவியே  அந்த புகாருக்கு பின் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் என்றும், இதன் அடிப்படையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி தரப்பில் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணை வரும் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜான வழக்கறிஞர் தனக்கு எதிரான புகாரில்  குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் கிடையாது, தன்னை பழி வாங்கும் நோக்கத்துடன் அரசியல் அழுத்தம் காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில், சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு  மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. மாணவி அளித்த புகாரில் எதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, எந்த ஆவணங்கள் திரட்டப்பட்டது என்ற விவரங்கள் உள்ளிட்ட தகவல் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.