சமூக வலைதளங்களில் ஒரு வினோத வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பார்த்தவுடன் ஏதோ ஒரு நீண்ட கால் சிலந்தி என்று நாம் நினைக்கும் அடுத்த நொடியே, அது ஒரு அபாயகரமான பாம்பாக உருமாறி அதிர்ச்சியளிக்கிறது. இது மந்திர வித்தை அல்ல, இயற்கையின் விசித்திரப் படைப்பான ‘ஸ்பைடர்-டெய்ல்ட் ஹார்ன்ட் வைப்பர்’ (Spider-tailed Horned Viper) எனப்படும் ஒரு வகை விரியன் பாம்பு.
ஈரான் நாட்டு மலைப்பகுதிகளில் காணப்படும் இந்தப் பாம்பின் அறிவியல் பெயர் Pseudocerastes urarachnoides. இதன் வால் பகுதி ஒரு பெரிய சிலந்தியைப் போலவே தடித்தும், கால்கள் போன்ற நீண்ட இழைகளுடனும் காணப்படுகிறது. இந்தப் பாம்பு தனது வாலை அசைக்கும்போது, தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு ஏதோ ஒரு சிலந்தி ஊர்ந்து செல்வது போன்ற பிரமையைத் தருகிறது.
View this post on Instagram
மலை இடுக்குகளில் உள்ள பாறைகளின் நிறத்தோடு தனது உடலை மறைத்துக்கொண்டு இந்தப் பாம்பு மணிக்கணக்கில் அசையாமல் காத்திருக்கும். தனது வாலை மட்டும் சிலந்தியைப் போல ஆட்டி பறவைகளை ஈர்க்கும். சிலந்தியைப் பிடிக்க வரும் பறவையை, கண்ணிமைக்கும் நேரத்தில் அதாவது வெறும் 0.2 வினாடி வேகத்தில் இந்தப் பாம்பு வேட்டையாடுகிறது.
கடந்த 1968-ஆம் ஆண்டு முதன்முதலில் இந்தப் பாம்பு கண்டறியப்பட்டபோது, இதன் வாலில் ஏதோ புற்றுநோய் (Tumor) பாதிப்பு இருப்பதாகவே விஞ்ஞானிகள் கருதினர். ஆனால், 2006-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில்தான், இது அந்தப் பாம்பின் வேட்டைத் தந்திரம் என்பது உறுதி செய்யப்பட்டது.
மேற்கு ஈரானின் ஜாக்ரோஸ் மலைப்பகுதிகளில் மட்டுமே வாழும் இந்த ‘மாயாவி’ பாம்புகள், தற்போது அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
