இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பிரைடன் கார்ஸை காவல்துறையினர் கைவிலங்கு போட்டு அழைத்துச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தின் டெர்பி பகுதியில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
டெர்பிஷையர் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் டர்ஹாம் அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதனைப் பொண்டாடுவதற்காகப் பிரைடன் கார்ஸ் மற்றும் சக வீரர்கள் இரவு விடுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து கார்ஸை மூன்று காவல்துறை அதிகாரிகள் கைவிலங்கு போட்டுத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த வைரல் வீடியோவில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சம்பவ இடத்தில் உள்ள ஒரு தூணின் பின்னாலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், கார்ஸ் சிறிது நேரம் மட்டுமே காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் எந்தவொரு புகாரும் இல்லாமல் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து வீரர்கள் களத்திற்கு வெளியே இதுபோன்று ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே இதுபோன்ற இரவு விடுதி சர்ச்சைகளில் சிக்கிய பின்னரே பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இங்கிலாந்து கிரிக்கெட்டின் ‘நைட் கிளப் கலாச்சாரம்’ மீண்டும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கருத்தில் கொண்டுள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB), சம்பவம் தொடர்பாக உடனடியாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
