பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகத் தியாகங்கள் செய்வது இயற்கை. ஆனால், உலகமே தெரியாத ஒரு சிறு குழந்தை, தனது மாற்றுத்திறனாளித் தாய்க்குச் செய்த உதவி என அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இன்னும் டயபர்  கூட மாற்றப்படாத ஒரு பச்சிளம் குழந்தை சித்திரிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தையின் தாய் கால்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார். இதைக் கண்ட அந்தச் சிறுவன், தனது பிஞ்சுத் தோள்களில் தனது தாயைச் சுமக்க முயற்சி செய்கிறான்.

அந்தத் தாயை அப்படியே முதுகில் ஏற்றித் தூக்க அவன் காட்டும் வேகம், பார்ப்பவர்களின் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. அந்தப் பிஞ்சுத் தோள்களுக்குத் தனது தாயின் பாரத்தைத் தாங்கும் சக்தி இல்லை என்றாலும், அவனது எண்ணம் இமயமலை அளவு உயர்ந்து நிற்பதை அந்த வீடியோ காட்டுகிறது.

எக்ஸ் (X) தளம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவை, இதுவரை 20,000-க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் இல்லை என்றாலும், அதில் உள்ள ‘பாசம்’ உண்மையானது எனப் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர். தோள்கள் சிறியதாக இருக்கலாம், ஆனால் பொறுப்பும் எண்ணமும் மிகப் பெரியது. இத்தகைய பிள்ளைகளே எதிர்காலத்தில் பெற்றோரின் உண்மையான ஊன்றுகோலாக இருப்பார்கள்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் பெரியவர்களே பெற்றோரைச் சுமையாகக் கருதும் இந்தக் காலத்தில், இந்தச் சிறுவனின் செயல் ஒரு மாபெரும் பாடம்” என நெகிழ்ந்துள்ளனர். வாழ்க்கையின் கஷ்டங்கள் தெரியாத வயதிலேயே, தாயின் வலியையுணர்ந்து மனிதாபிமானத்துடன் செயல்படும் அந்தச் சிறுவனின் மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதைக் காட்டுகிறது.