உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாம்பு கடித்த சிறுவனை, நதியில் மிதக்க விட்டால் உயிர் பிழைத்துவிடுவான் என்ற மூடநம்பிக்கையால் கங்கை நதியில் 12 மணி நேரம் வைத்திருந்த அவலம் நிகழ்ந்துள்ளது. இறுதியில் அந்தச் சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டம், ஆதம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அமித் (13). 4-ஆம் வகுப்பு மாணவனான இவனை கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷப்பாம்பு கடித்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அவனது குடும்பத்தினர் ஒரு வினோதமான மூடநம்பிக்கையைப் பின்பற்றியுள்ளனர்.

பாம்பு கடித்தவர்களை ஓடும் நதியில் மிதக்க விட்டால், நதி நீரின் வேகத்திலும் புனிதத்தன்மையிலும் விஷம் இறங்கி மீண்டும் உயிர் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கையில், சிறுவன் அமித்தை கங்கை நதிக்குக் கொண்டு சென்றனர். நதியில் ஒரு பாதுகாப்பான அமைப்பை ஏற்படுத்தி, அதில் சிறுவனை வைத்து சுமார் 12 மணி நேரம் தண்ணீரில் மிதக்க விட்டனர். அமித் எப்படியாவது கண் விழிப்பான் என அவனது குடும்பத்தினரும், உறவினர்களும் ஆற்றங்கரையிலேயே காத்திருந்தனர். ஆனால், 12 மணி நேரம் கடந்தும் சிறுவனிடம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இறுதியில் சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, அவனது உடல் கங்கையிலேயே முறைப்படி தகனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் (PHC) தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஷஷாங்க் சௌத்ரி ஊடகங்களிடம் கூறுகையில், அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கான  ஊசி மருந்துகள் போதிய அளவில் இருப்பு உள்ளன. பாம்பு கடித்தவுடன் காலம் தாழ்த்தாமல் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தால், அந்த ஊசி மூலம் நிச்சயம் அவனது உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். மூடநம்பிக்கையால் ஒரு பிஞ்சு உயிர் பறிபோயிருப்பது வேதனை அளிக்கிறது,” என்றார்.