அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீர் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். பாமகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது இந்தப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைவது உறுதியாகியுள்ளது. இன்று காலை எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கூட்டணியை உறுதி செய்தார். இந்த முக்கிய முன்னேற்றத்தைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி உடனடியாக டெல்லி செல்வது முக்கியத்துவம் பெறுகிறது.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சி வந்த அமித் ஷாவைச் சந்திப்பதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்திருந்தார்.
அதேசமயம், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் முகாமிட்டு அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாமகவை கூட்டணியில் சேர்த்த கையோடு எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது, தேசிய அளவிலான கூட்டணி வியூகத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவின் உள்கட்சி விவகாரங்கள் மற்றும் தேர்தல் கால ஒருங்கிணைப்பு குறித்து பாஜக மேலிடத்துடன் அவர் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
