மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில், பள்ளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆறாம் வகுப்பு மாணவி மீது மர்ம நபர் ஆசிட் வீசித் தாக்கிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சங்கம்னேர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் சைக்கிளில் பள்ளிக்குச் செல்லும் அந்த மாணவி, நேற்று காலை 11:30 மணியளவில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வீட்டிற்குச் செல்லும் வழியில், ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் மாணவியை மறித்த மர்ம நபர் ஒருவர், முகவரி கேட்பது போல நடித்துள்ளார். மாணவி பதில் சொல்ல முயன்றபோது, மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவரது முகத்தில் ஊற்றிவிட்டு தப்பியோடினார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், அவரை மீட்டு உடனடியாக லோனியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்தத் தாக்குதலில் மாணவியின் வலது கண் மற்றும் முகத்தின் வலது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாநில பெண்கள் ஆணையத் தலைவி ரூபாலி சாகங்கர் கூறுகையில், “மாணவியின் முகம் 7 சதவீதம் வரை தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,” என்றார்.
சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மர்ம நபரின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தியும் அந்த பகுதி கிராம மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
