மெட்டா நிறுவனத்தின் தயாரிப்பான ‘ரே-பான்’ (Ray-Ban) ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் அந்தரங்கக் காட்சிகள், செயற்கை நுண்ணறிவு (AI) மேம்பாடு என்ற பெயரில் ஊழியர்களால் கண்காணிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட தளங்களை இயக்கும் மெட்டா நிறுவனம், ‘எசிலார் லுக்சோட்டிகா’ நிறுவனத்துடன் இணைந்து ‘ரே-பான் ஸ்மார்ட் கிளாஸ்’களைத் தயாரித்து வருகிறது. 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 70 லட்சம் கண்ணாடிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. இந்நிலையில், இந்தக் கண்ணாடிகள் மூலம் பயனர்களின் மிகத் தனிப்பட்ட வாழ்க்கை உளவு பார்க்கப்படுவதாக ஸ்வீடன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கென்யாவின் நைரோபியில் உள்ள ‘Sama’ என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊழியர்கள், இந்தக் கண்ணாடிகள் மூலம் பதிவாகும் வீடியோக்களை வகைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த நிறுவன ஊழியர் ஒருவர் கூறுகையில்,

“வரவேற்பு அறை முதல் நிர்வாண உடல்கள் வரை அனைத்தையும் நாங்கள் பார்க்கிறோம். சிலர் இந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டே உடலுறவு கொள்கிறார்கள்; அவற்றை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது” என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.

உடைகளைக் களைவது, கழிவறைக்குச் செல்வது போன்ற காட்சிகள் மட்டுமின்றி, சில வீடியோக்களில் பயனர்களின் வங்கி அட்டைகள் (Bank Cards) தெளிவாகத் தெரிவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை தவறான நபர்களின் கைகளுக்குக் கிடைத்தால், மிகப்பெரிய அளவிலான பணமோசடி நடக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து மெட்டா நிறுவனம் தனது தனியுரிமைக் கொள்கையில் (Privacy Policy), “செயற்கை நுண்ணறிவை (AI) மேம்படுத்த பயனர்களின் உரையாடல்கள் மற்றும் தரவுகள் தானியங்கி முறையிலோ அல்லது மனிதர்கள் மூலமாகவோ ஆய்வு செய்யப்படலாம்” என்று குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், பயனர்களின் அந்தரங்க உரிமையைத் பறிக்க மெட்டா நிறுவனம் சட்டபூர்வமாகச் செய்யும் தந்திரமே இது எனத் தொழில்நுட்ப விமர்சகர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

ஏற்கனவே தரவு திருட்டு புகார்களில் சிக்கியுள்ள மெட்டா நிறுவனத்திற்கு, இந்த ‘ஸ்மார்ட் கிளாஸ்’ விவகாரம் மீண்டும் ஒரு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.