கர்நாடக மாநிலம் மூடிகெரேவில் உள்ள விடுதியின் குளியலறையில் இளம்பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம்  தேவலாபுரா கிராமத்தைச் சேர்ந்த தேவராஜின் மகள் ரஞ்சிதா (27), பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, அங்குள்ள விடுதியில் தங்கி வந்தார்.

சமீபத்தில், ரஞ்சிதாவின் தோழி ஒருவரின் திருமண நிச்சயதார்த்த விழா சிக்கமகளூரு மாவட்த்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ரஞ்சிதா தனது தோழி ரேகாவுடன் மூடிகெரேக்கு வந்தார். பின்னர் இருவரும் அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று காலை ரேகா முதலில் குளித்துவிட்டு வெளியே வந்தார். அதன் பிறகு ரஞ்சிதா குளிக்கச் சென்றார். ஆனால் வெகுநேரம் கடந்தும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ரேகா, குளியலறை கதவை தட்டியபோதும் பதில் இல்லை. உடனே அவர் விடுதி ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ரஞ்சிதா குளியலறையில் பிணமாக கிடந்தார்.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரணத்தின் காரணம் குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இதுதொடர்பாக போலீசார் ரேகாவிடம் விசாரணை நடத்தியபோது, குளியலறையில் தண்ணீர் சூடேற்றும் கருவியில் (Geyser) வாயு கசிவு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். எனினும், ரஞ்சிதாவின் மரணம் குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததால், மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.

மேலும், சம்பவம் நடைபெற்ற விடுதி உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்ததும், வரி பாக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விடுதி உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.