உத்தரப் பிரதேச மாநிலம் தேவாரியா மாவட்டத்தில், ஓடும் ரயிலில் என்.சி.சி (NCC) மாணவி ஒருவரை டிக்கெட் பரிசோதகர் (TTE) பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள அந்த அதிகாரியைப் பிடிக்க ரயில்வே போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது ஒரு 22 வயது மாணவி, கோரக்பூரில் தங்கி படித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில், தனது என்.சி.சி ‘C’ சான்றிதழ் தேர்வை முடித்துவிட்டு கோரக்பூர் செல்வதற்காக அவர் ரயிலில் ஏறியுள்ளார். ரயில் நிலையத்தில் நிலவிய கடும் கூட்ட நெரிசல் காரணமாக, அவரால் பயணச்சீட்டு (Ticket) வாங்க முடியவில்லை.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட டிக்கெட் பரிசோதகர், அந்த மாணவி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாக மிரட்டியுள்ளார். பின்னர், அவருக்கு இருக்கை வசதி செய்து தருவதாகக் கூறி, ரயிலின் முதல் வகுப்பு பெட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத சூழலில், மாணவியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி அந்த அதிகாரியிடம் இருந்து போராடித் தப்பித்து, உடனடியாக அவசர உதவி எண்ணான 112-க்குத் தொடர்பு கொண்டு போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார். இதற்கிடையே, ரயில் தேவாரியா நிலையத்தை அடைந்ததும், சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள அரசு ரயில்வே போலீசார் (GRP), தலைமறைவாக உள்ள டிக்கெட் பரிசோதகரைத் தேட தனிப்படைகளை அமைத்துள்ளனர். முதற்கட்ட நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட அதிகாரியை ரயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் ) செய்துள்ளது.மேலும் பெண் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
