மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், தனது காதலியை கொடூரமான முறையில் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில், தொழிலதிபரின் மகனை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலைக்கு பின் காதலியின் ஆவியுடன் பேச அவர் மாந்திரீக பூஜையில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளன.
இந்தூர், துவாரகபுரி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அங்கு சென்றனர். கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிரேதப் பரிசோதனையில், அந்தப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில், கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தனது மகளைக் காணவில்லை எனத் தந்தை ஒருவர் அளித்த புகாரை வைத்து போலீஸார் விசாரித்தனர். இதில் உயிரிழந்தவர் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்ட பெண் என்பதும், அவர் எம்.பி.ஏ மாணவி என்பதும் தெரியவந்தது. அந்த வீட்டை பியூஷ் தம்னோடியா என்பவர் வாடகைக்கு எடுத்திருந்தது விசாரணையில் அம்பலமானது.
கைது செய்யப்பட்ட பியூஷ் தம்னோடியா போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, நானும் அந்தப் பெண்ணும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தோம். அவர் வேறு சில ஆண்களுடன் பேசுவதாக எனக்குச் சந்தேகம் இருந்தது.
சம்பவத்தன்று அவரைப் பேச அழைத்தேன். அப்போது உல்லாசமாக இருக்க வற்புறுத்தியபோது அவர் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், பாலியல் உணர்வை அதிகரிக்கும் மாத்திரைகளை உட்கொண்டுவிட்டு அவரை வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்தேன்.
பின்னர், அவர் தப்பிக்க முயன்றதால் கை கால்களைக் கட்டி, வாயில் துணியைத் திணித்துக் கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தேன்.
கொலை செய்த பிறகு ஆத்திரம் தீராமல் சடலத்தின் அருகிலேயே அமர்ந்து மது அருந்தியுள்ளார் பியூஷ். பின்னர் அங்கிருந்து மும்பைக்குத் தப்பியோடிய அவர், அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது, தான் கொன்ற காதலியின் ஆவியைத் வரவழைத்துப் பேச வேண்டும் என்பதற்காக, யூடியூப் வீடியோக்களைப் பார்த்து மஞ்சள், குங்குமம், வளையல்கள் வைத்து மாந்திரீக பூஜை செய்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் செல்லிடப்பேசியை எடுத்துச் சென்ற பியூஷ், அதில் இருந்த தரவுகளை அழித்துள்ளார். ஆனால், சம்பவத்தன்று தனது தங்கையிடம் “பியூஷுடன் பிறந்தநாள் விழாவுக்குச் செல்கிறேன்” என்று அந்தப் பெண் கூறியதும், கடைசியாக அவரது போனில் இருந்து வந்த குறுஞ்செய்தியும் போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சைபர் க்ரைம் உதவியுடன் பியூஷின் நடமாட்டத்தைக் கண்காணித்த தனிப்படை போலீஸார், மும்பையில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
