கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராணி. இவர் தனது பேரன் சிரஞ்சீவி தொழில் செய்வதற்காக, தனது பெயரில் புதிதாக ஒரு ஜேசிபி இயந்திரத்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.
அந்த இயந்திரத்தை சிரஞ்சீவி இயக்கி வந்த நிலையில், அதற்கான கடன் தவணைத் தொகையைச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பாட்டி ராணியிடம், தவணை கட்டப் பணம் கேட்டு சிரஞ்சீவி தகராறு செய்துள்ளார்.
பணம் தர ராணி மறுத்ததால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, தான் கொண்டு வந்த ஜேசிபி இயந்திரத்தாலேயே தனது பாட்டியைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ராணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட பேரன் சிரஞ்சீவியைக் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
