“நடிகர் விஜய் நேற்றுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்; அவரது மனதில் பாஜக தான் உறுதியாக இருக்கிறது” என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்ட குஷ்பு, அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கடந்த முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நான், இந்த முறை ஏன் தேர்தலில் நிற்கவில்லை எனப் பலரும் கேட்கிறார்கள். நான் வேட்பாளராக நின்றால், ஒரு சாதாரணத் தொண்டனாக வெளியில் சென்று என்னால் பணியாற்ற முடியாது. இந்தத் தேர்தலில் மதுரையில் எனது கணவர் (சுந்தர் சி) போட்டியிடுகிறார். அவருக்காகவும் நான் பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா என மூன்று மாநிலங்களிலும் பரப்புரை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை.

நேற்று புதுச்சேரியில் பிரச்சாரம் செய்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பாஜகவை ‘குழப்பமான கூட்டணி’ என்று விமர்சித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த குஷ்பு, “விஜய் நேற்றுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவருக்கு அரசியல் இன்னும் முழுமையாகத் தெரியாது. அரசியல் நன்றாகத் தெரிந்தவர்களைப் பற்றி நாம் பேசலாம், விஜய்யை விட்டுவிடுங்கள்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “நேற்று மணலி தொகுதியில் பிரச்சாரம் செய்தபோது, தனது கட்சி வேட்பாளருக்கு வாக்கு கேட்காமல், பாஜக வேட்பாளர் செல்வம் பெயரைக் கூறி விஜய் வாக்கு சேகரித்துள்ளார். இதன் மூலம் விஜய்யின் மனதில் பாஜக தான் உறுதியாக இருக்கிறது என்பது தெரிகிறது. அதுவரை எங்களுக்குச் சந்தோஷமே. கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறுவது உறுதி” என்று அவர் தெரிவித்தார்.