ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகமும், நடிகை பரினீதி சோப்ராவின் கணவருமான ராகவ் சத்தா, சமீபத்தில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அவரது மனைவியின் சகோதரி பிரியங்கா சோப்ரா இதற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கிக் தொழிலாளர்கள் (Gig workers), தந்தையர்களுக்கான மகப்பேறு விடுப்பு (Paternity leave) மற்றும் வருமான வரி போன்ற மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை ராகவ் சத்தா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். எனினும், கட்சி நிர்வாகம் இது ஒரு ‘சாதாரண நடைமுறை’ எனக் கூறி, அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் குமார் மிட்டலை அந்த இடத்திற்கு நியமித்தது.
பதவி நீக்கத்திற்குப் பிறகு, ராகவ் சத்தா நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய உரைகளின் தொகுப்பை ஒரு வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து அவர் எழுப்பிய கேள்விகள் இடம்பெற்றுள்ளன.
View this post on Instagram
இந்த வீடியோவைப் பார்த்த சர்வதேச நடிகை பிரியங்கா சோப்ரா, ராகவ் சத்தாவை ஊக்கப்படுத்தும் விதமாக கமெண்ட் செய்துள்ளார். ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ‘கை உயர்த்தும்’ இமோஜி, பாராட்டும் விதமாக ‘கைதட்டல்’ இமோஜி மற்றும் அன்பை வெளிப்படுத்தும் ‘காதல்’ இமோஜிகளைப் பதிவிட்டுள்ளார்.
பிரியங்காவின் இந்த ரியாக்ஷனைத் தொடர்ந்து, ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். உங்க சொந்தக் கட்சியே ஏன் இவரை நீக்கியது? என ஒரு ரசிகர் கேட்க, மற்றொருவரோ, “அக்கா, இவரை பாஜகவில் சேரச் சொல்லுங்கள்” என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும் ராகவ் சத்தாவின் மனைவி பரினீதி சோப்ரா இதுகுறித்து இன்னும் மௌனம் காத்து வருகிறார். ஆனால், சில நாட்களுக்கு முன்பு தந்தையர்களுக்கான விடுப்பு குறித்து ராகவ் பேசியபோது, அவரைப் பாராட்டி பரினீதி ஒரு நீண்ட பதிவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
