தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உருவாகும் சூழல் நிலவுகிறது.

தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அரசியல் கட்சிகள் விருப்பமனு பெறுதல் மற்றும் நேர்காணல் நடத்துதல் போன்ற பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்தச் சூழலில், அதிமுக – பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைத்துள்ளன. இக்கூட்டணியில் பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட பல கட்சிகள் ஏற்கனவே இணைந்துள்ளன.

மேலும் சில கட்சிகள் இக்கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை மேலும் வலுப்படுத்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு புதிய குழுவை அமைத்துள்ளார்.

இந்தக் குழுவின் தலைவராக பாஜக மாநிலத் துணைத்தலைவர் வி.பி. துரைசாமியும், துணைத்தலைவராக மாநிலச் செயற்குழு உறுப்பினர் பாலச்சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற வேண்டும் என்ற நோக்கில், கூட்டணியில் இணைய வரும் புதிய அமைப்புகள் மற்றும் கட்சித் தலைவர்களுடன் இந்தக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.