தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி நிர்வாகியான விஜயலட்சுமி அரவிந்த், அக்கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இன்று தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். மென்பொருள் பொறியாளரான இவர், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவில் இணைந்து, தொலைக்காட்சி விவாதங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் “தி சாஃப்ரான் கேர்ள்” என்ற அடையாளத்தோடு அக்கட்சிக்காகத் தீவிரமாக குரல் கொடுத்து வந்தார்.

அவரது களப்பணியைப் பாராட்டி பாஜகா தலைமை அவருக்கு மகளிரணி மாநிலச் செயற்குழு உறுப்பினர், மாநில ஊடகத் தொடர்பு இணைப் பொறுப்பாளர் போன்ற முக்கியப் பொறுப்புகளை வழங்கியிருந்தது. இந்நிலையில், நேற்று தனது அனைத்துப் பதவிகளையும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்வதாக பாஜக மாநிலத் தலைமைக்கு அவர் கடிதம் அனுப்பியிருந்தார்.

பாஜகவிலிருந்து வெளியேறிய விஜயலட்சுமி அரவிந்த், இன்று தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் முறைப்படி அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து தவெக தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் சமீபகாலமாக மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் தளபதி விஜய்யின் தவெக-வை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கடந்த ஜூன் 13 அன்று பாஜகவில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி தவெக-வில் இணைந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது பாஜக ஊடகப் பிரிவின் முக்கிய முகமான விஜயலட்சுமி அரவிந்தும் தவெக-வில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.