குஜராத் மாநிலம் வதோதராவில் 5 வயது சிறுமி தியானி தாக்கர், இருமல் மருந்து குடித்த சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் இல்லாத நிலையில் தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த அச்சிறுமிக்கு, அவரது சித்தப்பா மருந்துக் கடையில் இருந்து வாங்கி வந்த சிரப்பை கொடுத்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சிறுமியின் இறுதிச்சடங்கின் போது அங்கு வந்த அவரது பெரியம்மா ரூபல் படேல், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தடுத்து நிறுத்தியதுடன், சொத்துத் தகராறு காரணமாகச் சிறுமிக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதனிடையே, தன் மீதான புகாரை மறுத்துள்ள பாட்டி அஞ்சு பென், சிறுமியின் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்கவே தன் மீது பழி போடுவதாகக் கூறி கதறி அழுதார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுமியின் உடல் கூறாய்வு முடிவுக்குப் பிறகே இது மருந்து ஒவ்வாமையா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது தெரியவரும் எனத் தெரிவித்துள்ளனர்.