டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஹை-வோல்டேஜ் போட்டி இன்று (பிப்ரவரி 15, ஞாயிறு) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கு முன்னதாக, இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவை விமர்சித்த பாகிஸ்தான் வீரர் முகமது அமீருக்கு, முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அபிஷேக் சர்மாவை ஒரு ‘ஸ்லாகர்’ (Slogger – பந்துகளைக் கண்டபடி சுழற்றி அடிப்பவர்) என்று விமர்சித்திருந்தார். அபிஷேக் சர்மாவிடம் முறையான பேட்டிங் நுணுக்கங்கள் இல்லை என்றும், அவரை எளிதில் வீழ்த்திவிடலாம் என்றும் அமீர் கூறியிருந்தார்.

இதற்கு ஸ்போர்ட்ஸ் டாக் (Sports Tak) நிகழ்ச்சியில் விக்ராந்த் குப்தாவிடம் பேசிய ஹர்பஜன் சிங் கூறியதாவது:

“அபிஷேக் சர்மா ஒரு முழுமையான பேட்டர். அவரிடம் கிரிக்கெட் புத்தகத்தில் உள்ள அனைத்து விதமான ஷாட்டுகளும் உள்ளன. அவரை ஒரு சாதாரண ஸ்லாகர் என்று சொல்வது நியாயமற்றது. மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ரன்களைக் குவிக்கும் ஆற்றல் அவருக்கு உண்டு.

கடந்த 4-5 மாதங்களாகவே அபிஷேக் சர்மா உங்கள் (பாகிஸ்தான்) கனவில் வந்து கொண்டிருக்கிறார். இன்றைய போட்டியில் அவர் நிலைத்து நின்று ஆடினால், அடுத்த 6 மாதங்களுக்கு அவர் உங்கள் கனவில் மீண்டும் வந்து மிரட்டுவார். அதை மட்டும் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

வயிற்றுப்போக்கு காரணமாக நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாத அபிஷேக் சர்மா, தற்போது முழுமையாகக் குணமடைந்து அணியில் இணைந்துள்ளார். டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அவர், இன்றைய போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அபிஷேக் சர்மா இல்லாத நிலையில் நடந்த நமீபியாவுக்கு எதிரான போட்டியில், இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதன்படி இஷான் கிஷன்: 61 (24 பந்துகள்) ஹர்திக் பாண்டியா: 52 (28 பந்துகள்) வருண் சக்கரவர்த்தி: 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தனர்.

209 ரன்கள் குவித்த இந்திய அணி, நமீபியாவை 116 ரன்களுக்குச் சுருட்டியது. இன்றைய போட்டியில் அபிஷேக் சர்மா மீண்டும் களமிறங்குவது இந்திய அணிக்குக் கூடுதல் பலத்தைத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

மேலும் அபிஷேக் சர்மா இதுவரை 39 டி20 போட்டிகளில் விளையாடி 1,297 ரன்கள் குவித்துள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட் 194.45 என்பது குறிப்பிடத்தக்கது.