நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் சுற்றோடு வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்த பாகிஸ்தான் அணி, அடுத்ததாக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இத்தொடருக்கான பாகிஸ்தான் ஒருநாள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலகக் கோப்பை தோல்வியின் எதிரொலியாக அணியில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அணியின் நட்சத்திர வீரர்களாகக் கருதப்பட்ட முன்னாள் கேப்டன் பாபர் அசாம், அதிரடி ஆட்டக்காரர் பஹர் ஜமான், இளம் வீரர் சைம் அயூப் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மோசமான ஃபார்ம் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம், காயத்திலிருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அணியைப் புத்தாக்கம் செய்யும் நோக்கில் ஐந்து புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி: மாஸ் சதாகத், ஷமில் ஹூசைன், காஜி கோரி, சாத் மசூத், அப்துல் சமாத் ஆகியோர் முதல்முறையாகத் தேசிய அணியில் இடம் பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த ஆட்டங்கள் அனைத்தும் டாக்காவில் நடைபெறவுள்ளன.  மேலும் பாகிஸ்தான் அணியில் ஷகீன் ஷா அப்ரிடி (கேப்டன்), அப்துல் சமாத், அப்ரார் அகமது, பகீம் அஷ்ரப், பைசல் அக்ரம், ஹாரிஸ் ரவுப், ஹூசைன் தலாத், மாஸ் சதாகத், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், காஜி கோரி, சாத் மசூத், சஹிப்சதா பர்ஹான், சல்மான் அலி ஆகா, ஷமில் ஹூசைன் ஆகிய வீரர்கள் இடம்பெறுள்ளனர்.