டி20 உலகக் கோப்பை 2026-ன் இரண்டாவது அரைஇறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்தை இன்று (மார்ச் 5, வியாழக்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும். இந்த முக்கியமான போட்டி குறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற முன்னாள் வீரர்கள் முகமது அமீர் மற்றும் அகமது ஷேசாத் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு, வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் மற்றும் ரஷித் லத்தீப் ஆகியோர் இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இது குறித்து அமீர் கூறுகையில், இந்திய அணியின் பேட்டிங் வரிசை ஒருசில வீரர்களை மட்டுமே நம்பியுள்ளது. பெரும்பாலான வீரர்கள் ஃபார்மில் இல்லை. ஒரு பெரிய போட்டியில் ஒன்று அல்லது இரண்டு வீரர்களை மட்டுமே நம்பியிருந்தால் ஆதிக்கம் செலுத்த முடியாது. எனவே, இங்கிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ரஷித் லத்தீப், “மும்பை வான்கடே மைதானத்தில் இரவு நேரத்தில் இலக்கைத் துரத்துவது இங்கிலாந்துக்குச் சாதகமாக இருக்கும். பட்லர் மற்றும் சால்ட் இன்னும் தங்களது அதிரடியைக் காட்டவில்லை; அவர்கள் ஃபார்முக்குத் திரும்பினால் இந்தியாவால் தடுப்பது கடினம்” என்றார்.

 

ஆனால், சக வீரர்களின் கருத்தை மறுத்த அகமது ஷேசாத், இந்திய அணியே வெற்றி பெறும் எனத் திட்டவட்டமாகக் கூறினார். அவர் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசியதைக் கண்ட தொகுப்பாளர், “நீங்கள் ஒரு இந்தியரைப் போலப் பேசுகிறீர்களே?” என விளையாட்டாகக் கேட்டார். அதற்கு உடனடியாகப் பதிலளித்த ஷேசாத், “இது கிரிக்கெட் மற்றும் விளையாட்டு தொடர்பானது. தற்போதைய நிலையில் இந்திய அணியே மற்ற அணிகளை விடச் சிறந்தது என்று நான் உணர்கிறேன். ஆனால், நாட்டுப் பற்று என்று வரும்போது எங்களது உயிரே பாகிஸ்தானுக்குத்தான்,” என உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.

 

நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது. மேலும் இன்று மும்பையில் நடக்கும் போட்டியில் இந்தியா வென்று, அகமதாபாத்தில் நியூசிலாந்துடன் மோத வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.