டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டிக்கு முன்னதாக, நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் இந்திய அணியை கிண்டல் செய்யும் வகையில் பேசியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஆனால், ஆய்வின் முடிவில் இது ஒரு போலிச் செய்தி’ என்பது தெரியவந்துள்ளது.
அரைஇறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பிறகு, பின் ஆலனிடம் “இறுதிப் போட்டியில் நீங்கள் யாரை எதிர்கொள்ள விரும்புகிறீர்கள்? இந்தியாவையா அல்லது இங்கிலாந்தையா?” என்று கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் “நான் 14 வீரர்களுக்குப் பதில் 11 வீரர்களை எதிர்கொள்ளவே விரும்புகிறேன்” என்று நையாண்டியாகப் பதிலளித்ததாகவும் ஒரு ஸ்கிரீன்ஷாட் வைரலானது. இந்திய அணிக்கு மைதானத்தில் நடுவர்களின் ஆதரவு அல்லது கூடுதல் பலம் இருப்பதாக மறைமுகமாகக் கிண்டல் செய்யும் நோக்கில் இந்தப் பதிவு பகிரப்பட்டது.
AN INNINGS FOR THE AGES 🥶
– HUNDRED IN T20 WC KNOCK-OUT FROM JUST 33 BALLS…!!!
TAKE A BOW, FINN ALLEN. pic.twitter.com/5q8phr31JT
— Johns. (@CricCrazyJohns) March 4, 2026
இந்த வைரல் செய்தி குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பின்வரும் உண்மைகள் தெரியவந்துள்ளன: பின் ஆலன் இத்தகைய கருத்தைத் தெரிவித்ததற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்புப் பதிவோ, வீடியோவோ அல்லது நம்பகமான விளையாட்டு ஊடகச் செய்திகளோ இல்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் சதம் விளாசி வரலாற்றுச் சாதனை படைத்த பின் ஆலன், தனது அணியின் வெற்றி மற்றும் ஆட்டம் குறித்து மட்டுமே பேசினார்.
“11 வீரர்களுக்குப் பதில் 14 வீரர்கள்” என்பது கிரிக்கெட் ரசிகர்களால் நகைச்சுவைக்காகவும், இந்திய அணியின் பலத்தைக் கிண்டல் செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு ‘மீம்’ (Meme) ஆகும். இது எடிட் செய்யப்பட்டு வீரர் சொன்னது போலப் பரப்பப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறிய பிறகு, போட்டி மனப்பான்மை காரணமாகச் சில சமூக வலைதளப் பக்கங்களில் இத்தகைய ஆதாரமற்ற தகவல்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகக் கருதப்படுகிறது. எனவே, இறுதிப் போட்டிக்கு முன்பாகப் பரவி வரும் இந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்றும், பின் ஆலன் இந்தியாவைப் பற்றி அவ்வாறு பேசவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
