டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் முதலாவது அரைஇறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் அடைந்த படுதோல்வி, தென்னாப்பிரிக்க அணியை நிலைகுலையச் செய்துள்ளது. பின் ஆலனின் அதிரடி சதம் மற்றும் நியூசிலாந்தின் அபார ஆட்டத்தினால் வெளியேற்றப்பட்ட தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம், இந்தத் தோல்வியை ஒரு “மோசமான இரவு” என வேதனை தெரிவித்தார்.

தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடைபோட்டு வந்த தென்னாப்பிரிக்கா, மிக முக்கியமான அரைஇறுதி ஆட்டத்தில் சொதப்பியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி கம்பீரமாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் மார்க்ரம் தனது ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசியதாவது:”இது ஒரு மிக மோசமான இரவு. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் நாங்கள் தவறுகளைச் செய்தோம். பின் ஆலனின் இன்னிங்ஸ் எங்களிடமிருந்து வெற்றியைப் பறித்துவிட்டது. உண்மையைச் சொல்வதானால், திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்த நாங்கள் தவறிவிட்டோம். இந்தத் தோல்வியை ஜீரணிப்பது மிகவும் கடினமாக உள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், பவர்பிளே ஓவர்களில் நியூசிலாந்து எடுத்த அதிரடி தொடக்கமே ஆட்டத்தின் போக்கை மாற்றியதாகக் குறிப்பிட்டார். “நியூசிலாந்து வீரர்கள் பின் ஆலன் மற்றும் டிம் சீஃபர்ட் ஆகியோருக்குப் பாராட்டுக்கள். அவர்கள் மிக விரைவாக ஆட்டத்தை எங்கள் கைகளில் இருந்து பறித்துச் சென்றனர். ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருந்தது. நாங்கள் எப்படியாவது 190 ரன்களை எட்டியிருக்க வேண்டும். இந்த முடிவினால் நாங்கள் ஏமாற்றமடைந்தாலும், எனது வீரர்கள் மீது பெருமை கொள்கிறேன். மீண்டும் வலுவாகத் திரும்புவோம்,” என்றார்.

நியூசிலாந்து வீரர் பின் ஆலன் தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 33 பந்துகளில் சதம் விளாசி அவர் சாதனை படைத்தார். ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்த ஆலன், தனது அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்வதில் முக்கியப் பங்காற்றினார்.

முக்கியமான கட்டத்தில் தோற்கும் ‘சோக்கர்ஸ்’ என்ற பெயர் குறித்துக் கேட்கப்பட்டபோது, மார்க்ரம் தனது அணியைப் பாதுகாத்துப் பேசினார். “தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம், ஆனால் அரைஇறுதியில் அந்த வேகத்தைத் தொடர முடியவில்லை,” என்றார்.

மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தென்னாப்பிரிக்கா குரூப் சுற்றில் 4 போட்டிகளிலும், சூப்பர்-8 சுற்றில் 3 போட்டிகளிலும் எனத் தொடர்ந்து 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், வாழ்வா-சாவா என்ற அரைஇறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.