பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், நிறுவனத்தின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.27 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததோடு, உயர் அதிகாரிகளுக்கு ஆபாசப் படங்களை அனுப்பி மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஊழியருக்கு அலுவலக ரீதியான செலவுகளுக்காக ரூ.2 லட்சம் வரம்பு கொண்ட கார்ப்பரேட் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2023 அக்டோபர் முதல் 2024 ஜனவரி வரையிலான நான்கு மாத காலத்தில், அவர் அந்த கார்டு மூலம் ரூ.27,01,139 பணத்தைத் முறைகேடாகப் பயன்படுத்தியது நிறுவனத்தின் தணிக்கையில் தெரியவந்தது.
இது குறித்து கடந்த ஜனவரி 12-ம் தேதி நிறுவன நிர்வாகம் அவரிடம் விளக்கம் கேட்டது. அதற்கு ஜனவரி 15-ம் தேதி பதிலளித்த ஊழியர், “சீனா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் என்னைப் பயமுறுத்தியதால் தான் இந்தப் பணத்தைத் திருடினேன்” என விசித்திரமான காரணத்தைக் கூறித் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், அந்தப் பணத்தை மூன்று தவணைகளாகத் திருப்பிச் செலுத்திவிடுவதாகவும் உறுதியளித்தார்.
பணத்தைத் திருப்பிச் செலுத்த நிர்வாகம் பலமுறை வாய்ப்பளித்தும், அவர் ஒரு ரூபாய் கூடத் திருப்பித் தரவில்லை. பிப்ரவரி 9-ம் தேதி நிலைமை இன்னும் மோசமானது. பணத்தைத் திருப்பிக் கேட்பதை நிறுத்தவில்லை என்றால், தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டிய அந்த ஊழியர், தனது மேலாளருக்கு ஆபாசப் படங்களை அனுப்பி பிளாக்மெயில் செய்துள்ளார்.
இதையடுத்து, அந்த ஐடி நிறுவனம் தரப்பில் வர்த்தூர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அந்த ஊழியரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
