மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘நீல நிற டிரம்’ கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முஸ்கான் ரஸ்தோகி தனது காதலன் சாஹில் மற்றும் 6 மாதக் குழந்தையுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது உயிரிழந்த சௌரவ் ராஜ்புத்தின் தாய், நீதிமன்ற வளாகத்திலேயே கதறி அழுத காட்சி அங்கிருந்தோரை கலங்க செய்தது. அதாவது கொல்லப்பட்ட இளைஞர் சௌரவ் ராஜ்புத்தின் தாய், நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளிகளைப் பார்த்ததும் ஆவேசமடைந்தும், கண்ணீர் விட்டும் அழுதார். அவர் கூறுகையில்,

என் மகன் ஒவ்வொரு மாதமும் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பி வைப்பான். என்னை அவ்வளவு நன்றாகப் பார்த்துக்கொண்டான். அப்படிப்பட்ட என் மகனை இந்தக் கொடூரர்கள் கொன்றுவிட்டார்களே! இவர்களுக்குத் தூக்குத் தண்டனை மட்டுமே சரியான தீர்வாக இருக்கும் என ஆவேசமாகத் தெரிவித்தார்.

மீரட்டில் ஒரு நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் இளைஞர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அது சௌரவ் ராஜ்புத் என்பதும், முஸ்கான் ரஸ்தோகி தனது காதலன் சாஹிலுடன் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்ததும் அம்பலமானது. பண விவகாரம் அல்லது கள்ளக்காதல் விவகாரத்தால் இந்தக் கொலை நடந்துள்ளது. இந்த வழக்கில் கைதான முஸ்கான் ரஸ்தோகி, தனது 6 மாதக் குழந்தையுடன் நீதிமன்றத்தில் ஆஜரானது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறது.