மும்பையின் வொர்லி பகுதியில் ஆளும் பாஜாக கூட்டணி நடத்திய போராட்டத்தால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர், அம்மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் மற்றும் போலீஸாரை நேருக்கு நேர் நின்று சாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா பெரும்பான்மை இல்லாத காரணத்தால் தோல்வியடைந்ததைக் கண்டித்து, மகாயுதி கூட்டணியைச் சேர்ந்த பாஜகவினர் வொர்லி பகுதியில் மாபெரும் பேரணி நடத்தினர். எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடிக்கு எதிராக முழக்கமிட்டபடி நூற்றுக்கணக்கான பெண்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
வொர்லி ஜம்போரி மைதானத்திலிருந்து ‘டோம்’ பகுதி வரை திட்டமிடப்பட்ட இந்தப் பேரணி, மாலை 5 மணிக்குத் தொடங்குவதாக இருந்தது. ஆனால், பேரணி தொடங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளிக்குச் சென்ற தனது குழந்தையை அழைத்து வர காரில் சென்ற பெண் ஒருவர், பல மணி நேரம் அந்த நெரிசலில் சிக்கித் தவித்தார். பொறுமை இழந்த அந்தப் பெண், தனது காரை அப்படியே சாலையில் விட்டுவிட்டு ஊர்வலத்தின் நடுவே புகுந்தார். அங்கு இருந்த மகாராஷ்டிர நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜனை வழிமறித்து ஆவேசமாக வாதிட்டார்.
View this post on Instagram
அருகில் இவ்வளவு பெரிய காலி மைதானம் இருக்கும்போது, ஏன் சாலையை மறித்து ஊர்வலம் நடத்துகிறீர்கள்? இங்கே நூற்றுக்கணக்கான மக்கள் அவதிப்படுகிறார்கள். இங்கிருந்து வெளியேறுங்கள் எனக் கடுமையான வார்த்தைகளால் அவர் சண்டையிட்டார்.
தடுக்க வந்த போலீஸாரையும் அந்தப் பெண் விட்டுவைக்கவில்லை. போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், உயர் அதிகாரிகளுடன் பேச வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தார். இதையடுத்து, போலீஸார் அவரைச் சமாதானப்படுத்தி சாலையின் ஓரத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்களை அமைச்சரிடம் நேரடியாகக் கேட்ட இந்தப் பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசியல் பேரணிகளால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவது குறித்த விவாதத்தை இச்சம்பவம் மீண்டும் கிளப்பியுள்ளது.
