ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தானுக்கு, தற்போது நடந்து வரும் ஈரான் – இஸ்ரேல் போர் பலத்த அடியைக் கொடுத்துள்ளது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளதால், பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒரே நாளில் சுமார் 20 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
இதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 55 பாகிஸ்தானிய ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 280 ரூபாய்க்கு விற்ற டீசல் இப்போது 335 ரூபாய்க்கும், 266 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் 321 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த திடீர் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், ஆத்திரமடைந்த பாகிஸ்தான் மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் விலை சற்று உயர்ந்திருந்தாலும், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய விலை உயர்வு அந்நாட்டை நிலைகுலைய வைத்துள்ளது. போர் நீடித்தால் பாகிஸ்தானின் நிலைமை இன்னும் மோசமாகும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
