மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள ஒரு வினோத ஆப்ரேஷன் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நள்ளிரவு நேரத்தில் லெபனானின் நபிஷீத் கிராமத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய இஸ்ரேலின் 4 சிறப்பு கமாண்டோக்கள், அங்கிருந்த ஒரு பழமையான கல்லறையை (Cemetery) ஒட்டுமொத்தமாகத் தோண்டி எடுத்துள்ளனர்.

எதற்காகப் போர் நேரத்தில் இந்த வேலை என்று விசாரித்தபோதுதான், அதன் பின்னணியில் உள்ள 40 ஆண்டுகால ரகசியம் அம்பலமானது. கடந்த 1986-ம் ஆண்டு லெபனானில் நடந்த போரின்போது, இஸ்ரேலின் போர் விமானி ‘ரான் அராத்’ என்பவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அதன் பிறகு அவர் என்னவானார் என்றே தெரியாமல் இருந்த நிலையில், அவர் உயிரிழந்து இந்தக் கல்லறையில்தான் புதைக்கப்பட்டதாக இஸ்ரேலுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

தனது நாட்டு வீரனின் உடல் எஞ்சியிருந்தாலும் அதைச் சொந்த மண்ணிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற பிடிவாதத்தில், ஹிஸ்புல்லா அமைப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேல் இந்த அதிரடித் தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளது.

பல மணிநேரம் கல்லறையைத் தோண்டி ஆய்வு செய்த கமாண்டோக்கள், அங்கிருந்து சில முக்கிய தடயங்களைச் சேகரித்துச் சென்றுள்ளனர்.

போர் நடந்துகொண்டிருக்கும் போதே, 40 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரு வீரனுக்காக இஸ்ரேல் காட்டிய இந்த அர்ப்பணிப்பு மத்திய கிழக்கு அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.