அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மோதலில், ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையிலான போர் 9-வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போர் தற்போது ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து விரிவடைந்துள்ளதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஈரானின் ராணுவ நிலைகள், அரசு கட்டிடங்களைத் தொடர்ந்து, தற்போது அந்நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கிடங்குகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் முதல்முறையாகத் தாக்குதல் நடத்தியுள்ளன.
தலைநகர் டெஹ்ரானின் ஷாஹ்ரான், கோஹாக் மற்றும் மேற்கு டெஹ்ரானின் கராஜ் பகுதிகளில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதேபோல் அல்போர்ஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல்களால் அப்பகுதிகளில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை மண்டலம் எழுந்துள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், “ஈரான் தனது ராணுவ உள்கட்டமைப்புக்கும், படைகளுக்கும் எரிபொருளை விநியோகிக்க இந்தக் கிடங்குகளைப் பயன்படுத்தி வருகிறது. எனவே, அந்த ஆட்சியை முடக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
ஈரானின் கெஷ்ம் தீவில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், “அமெரிக்காவின் இந்த செயல் மனிதாபிமானமற்ற குற்றமாகும். இதனால் 30 கிராமங்களில் குடிநீர் விநியோகம் முடங்கியுள்ளது. ஈரானின் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளைத் தாக்குவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்” என எச்சரித்துள்ளார். இத்தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் தனது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை நோக்கித் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி குவைத் சர்வதேச விமான நிலைய எரிபொருள் கிடங்குகள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏவுகணை பாகங்கள் விழுந்ததில் குடியிருப்பு கட்டிடம் தீப்பிடித்தது; 2 எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
துபாயில் டிரோன் பாகங்கள் 90 மாடி மெரினா டவர் மீது விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது. அல் பர்ஷாவில் டிரோன் இடிபாடுகள் விழுந்ததில் வாகன ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். இதேபோன்று பக்ரைன், கத்தார், சவுதி அரேபியா மீதும் ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதேபோல் இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்கள் மீது ஈரான் கடும் தாக்குதலை தொடுத்துள்ளதால், அங்கு அபாய ஒலிகள் முழங்கின. இந்த மோதலில் இதுவரை ஈரானில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இஸ்ரேல், ஈரானின் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தி வருவதால், லெபனானிலும் உயிர்ச் சேதங்கள் அதிகரித்துள்ளன. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் மீது இன்று மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளதால், போரின் தீவிரம் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது.
