ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் 9-வது நாளை எட்டியுள்ள நிலையில், போர் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது.  இந்நிலையில், ஈரான் மீது இன்று வலிமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். “ஈரான் உடனடியாக தனது ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும்” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “ஆசியாவிலேயே மிகப்பெரிய ஏவுகணை கையிருப்பு எங்களிடம் உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு இடைவிடாமல் ஏவுகணைகளை வீசும் அளவுக்கு பல்லாயிரக்கணக்கான பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன.

குறிப்பாக, ஒலியின் வேகத்தை விட 15 மடங்கு வேகமாகச் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடிய ‘பத்தாஹ்-2’ (Fattah-2) போன்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை களமிறக்கத் திட்டமிட்டுள்ளோம்.” மேலும், “இஸ்ரேலின் ‘ஆரோ’ (Arrow) மற்றும் ‘டேவிட்ஸ் ஸ்லிங்’ (David’s Sling) போன்ற தற்காப்பு ஏவுகணை அமைப்புகளால், எங்களது நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைத் தடுப்பது இயலாத காரியம். அடுத்த 6 மாத காலத்திற்கு தீவிரப் போர் புரியும் முழு வலிமை எங்களிடம் உள்ளது” என்று ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும்  அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் ஒருபுறம், ஈரானின் ஏவுகணை மிரட்டல் மறுபுறம் என போர் தீவிரமடைந்து வருவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்த அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.