பெங்களூருவில் 35 வயது கேப் ஓட்டுநரான லோகிதாஸ்வா, தனது 28 வயது மனைவி ரேகாவை பகல் நேரத்தில் பஸ் நிறுத்தத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ரேகாவின் முதல் திருமணத்தில் பிறந்த 12 வயது மகளின் கண்முன்னே இந்தக் கொடூரக் கொலை நடந்தது. திங்கட்கிழமை காலை நடந்த இந்த சம்பவத்தில், ரேகா மார்பிலும் வயிற்றிலும் பலமுறை குத்தப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் லோகிதாஸ்வாவைத் தடுக்க முயன்றபோது, அவர் கத்தியைக் காட்டி மிரட்டி தப்பி ஓடிவிட்டார்.

ரேகாவும் லோகிதாஸ்வாவும் ஒன்றரை ஆண்டுகள் காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு அவர்களிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டன. ரேகாவுக்கு வேறு உறவு இருப்பதாக லோகிதாஸ்வா சந்தேகப்பட்டதே கொலைக்கு காரணம் என காவல்துறை முதல்கட்ட விசாரணையில் கருதுகிறது. சம்பவத்தன்று காலையில் இருவருக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ரேகா தனது 13 வயது மகளுடன் பஸ் நிறுத்தத்திற்கு சென்றபோது, பின்தொடர்ந்த லோகிதாஸ்வா அவரைக் கொலை செய்தார். இதையடுத்து காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, தப்பியோடிய லோகிதாஸ்வாவைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.