கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவந்திபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019- லோகநாதன் விவசாய மின் மோட்டார் இணைப்பிற்கு உண்டான மின்கம்பம் பழுதடைந்து இருப்பதாகவும், அதனை சரி செய்து தருமாறும் கூறியுள்ளார். அப்போது கடலூர் பாதிரிக்குப்பம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் போர்மேனாக வேலை பார்த்த தீனதயாளன் என்பவர் பழுதான மின்கம்பத்தை மாற்ற 800 ரூபாய் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார்.

இதுகுறித்து லோகநாதன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 800 ரூபாய் நோட்டுகளை லோகநாதன் தீனதயாளனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தீனதயாளனை கையும், களவுமாக கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி தீனதயாளனுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.