கடலூர் மாவட்டத்தில் உள்ள விழப்பள்ளம் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியர் ஆவார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு குறிஞ்சிப்பாடி சேர்ந்த ரஜினி என்பவர் மூலமாக நெய்வேலியை சேர்ந்த புரட்சி கதிர் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் புரட்சி கதிர் கடலூர் அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவில் ஊழியராக வேலை பார்க்கும் தீனதயாளன் என்பவரை தனக்கு தெரியும் எனவும், தீனதயாளன் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவார் எனவும் கூறினார்.

இதனை நம்பி இன்ஜினியரிங் படித்து முடித்த எனது மகன் வினோத்துக்கு மின்வாரியத்தில் இளநிலை பொறியாளர் வேலை வாங்கி தருவதற்காக 25 லட்சம் ரூபாய் பணமும், எனது மகள் வித்யாவிற்கு ஆசிரியர் வேலை வாங்கித் தருவதற்காக 15 லட்சம் ரூபாய் பணமும், மருமகள் அனிதாவிற்கு ஆசிரியர்களை வாங்கி தருவதற்காக 15 லட்சம் ரூபாய் பணமும் என மொத்தம் 55 லட்சம் ரூபாய் பணத்தை தீனதயாளனின் மனைவி உஷாவிடம் கொடுத்தேன்.

அவர்கள் பணத்தை வாங்கிவிட்டு போலியான பணி நியமன ஆணை கொடுத்து மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தீனதயாளன், உஷா ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். ஏற்கனவே இருவரும் வருவாய்த்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஆறு பேரிடமிருந்து 39 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.