கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சவனூர் பகுதியில் உள்ள அரசு உருது பள்ளியில் நடைபெற்ற பாலியல் தொல்லை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பள்ளியில் கல்வி கற்கும் மாணவிக்கு, அவரது வகுப்பு ஆசிரியர் ஜெகதீஷ் (39) தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மாணவி பலமுறை எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், ஆசிரியர் மிரட்டல்களை அதிகரித்ததாக கூறப்படுகிறது.
பெற்றோரிடம் புகார் செய்யப் போவதாக மாணவி எச்சரித்தபோது, “அப்படி செய்தால் வகுப்பிற்கு வர முடியாது; பாடத்தில் தேர்ச்சி அளிக்க மாட்டேன்” என ஆசிரியர் மிரட்டியதோடு, பள்ளி முடிந்த பின் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறும் வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாணவி மறுத்ததால், ஆசிரியர் அவரை அடிவயிற்றில் பலமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை மாணவி வீட்டில் தெரிவித்ததும், ஆத்திரமடைந்த பெற்றோர் உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் பள்ளிக்கு சென்று ஆசிரியரை வெளியே இழுத்து வந்து தர்மஅடி கொடுத்தனர். அவரது சட்டையை கிழித்து எறிந்து, செருப்பு மாலையையும் அணிவித்துள்ளனர்.
பின்னர் ஆசிரியரை பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்து சென்று சவனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஷை கைது செய்தனர். விசாரணையில், அவர் அந்த மாணவி மட்டுமல்லாது மேலும் பல மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் சவனூர் பகுதியில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
