ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த வெங்கட ரமணமூர்த்தி (71) என்பவர், ஏழுமலையானுக்கு கொண்டுள்ள பக்தி காரணமாக 3,460 தடவைகள் தரிசனம் செய்துள்ளமை பக்தர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் மேளராகப் பணி செய்து ஓய்வு பெற்ற இவர், ஏழுமலையானுக்கு சேவை செய்வதை வாழ்க்கையின் முக்கிய பகுதியெனக் கருதி, இதுவரை அலிபிரி நடைபாதையில் மட்டும் 3,250 முறை நடைபயணம் செய்து மலையையும் சுவாமியையும் தரிசித்துள்ளார்.
ஓய்வு பெற்ற பிறகு வாரத்தில் நான்கு நாட்கள் மலைக்குச் சென்று தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நடைபாதையில் “கோவிந்தா, கோவிந்தா” என நாமச்சொல்லை ஜெபித்தபடி செல்வதால், 2,388 படிகளையும் சுமார் 1½ மணி நேரத்தில் முடித்து விடுவதாக அவர் கூறுகிறார்.
71 வயதான தன்னையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது ஏழுமலையான் அருளே என வெங்கட ரமணமூர்த்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரது இந்த அசாதாரண பக்தியும் உறுதியும் திருப்பதி பக்தர்களை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
