கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது மஞ்சுநாத் என்பவர், தான் பெற்றெடுத்த 13 மற்றும் 10 வயதுடைய இரு மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

கல்குவாரித் தொழிலாளியாகப் பணியாற்றும் மஞ்சுநாத், குடிபோதைக்கு அடிமையானதால் அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், தனது மகள்களைப் பள்ளிக்குச் செல்லவிடாமல் வீட்டிலேயே சிறை வைத்திருந்தார். இந்தச் சூழலில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எப்படியோ பள்ளிக்குச் சென்ற இரு சிறுமிகளும், ஆசிரியர்களைச் சந்தித்துத் தங்கள் தந்தை குடிபோதையில் தங்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், வெளியே சொல்லிவிடுவோம் என்று பயந்துதான் பள்ளிக்கூடத்திற்கு வரவிடாமல் வீட்டிலேயே சிறை வைத்ததாகவும் கூறி கதறி அழுதனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து மஞ்சுநாத்தின் தாயிடம் கிராம மக்களும், ஆசிரியர்களும் புகார் அளித்தபோது, அவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார். இதற்கு முன்பு ஒருமுறை தன்னையும் மஞ்சுநாத் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், தான் கத்தி கூச்சலிட்டதால் அங்கிருந்து ஓடிச் சென்று சில நாட்கள் வீட்டுக்கே வராமல் இருந்ததாகவும் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

மகன் மீதான இந்தக் கொடூரக் குற்றச்சாட்டுகளைக் கேட்டு கொதித்தெழுந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு, சித்ரதுர்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள், மஞ்சுநாத் செய்த கொடூரத்தால் ஊரின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மஞ்சுநாத்தைக் கைது செய்து தூக்கில் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மனு அளித்தனர்.

கிராம மக்களின் மனுவைப் பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அவரது உத்தரவின் பேரில் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, பெற்ற மகள்களையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் மஞ்சுநாத்தை நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். இந்தக் கொடூரமான விவகாரம் சித்ரதுர்கா மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.