இந்திய கிரிக்கெட் அணி 2026 டி20 உலகக்கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், இந்த மாபெரும் வெற்றிக்குத் திரைக்குப் பின்னால் இருந்து உழைத்த ஒரு ‘அறியப்படாத நாயகன்’ குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அவர்தான் இந்திய அணியின் இடது கை த்ரோ-டவுன் (Throw-down) நிபுணரான இலங்கையைச் சேர்ந்த நுவான் செனவிரத்ன. ஒரு காலத்தில் கொழும்பில் தனது குடும்பத்தைக் காப்பாற்ற பள்ளிப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றிய நுவான், இன்று இந்தியாவை உலக சாம்பியனாக்கியதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

குறிப்பாக, இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்களைத் தயார்படுத்துவதில் இவர் கில்லாடி. 2017-ல் விராட் கோலியால் அடையாளம் காணப்பட்ட இவர், 2018 முதல் இந்திய அணியின் துணைக் குழுவில் இணைந்து, தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக (2024 மற்றும் 2026) இந்தியா உலகக்கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்துள்ளார்.

இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றவுடன், உலகக்கோப்பையை ஏந்தியபடி நுவான் செனவிரத்ன சமூக வலைதளங்களில் பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. “2024 மற்றும் 2026 எனத் தொடர்ந்து இரண்டு டி20 உலகக்கோப்பைகள்.. இந்திய அணி எப்போதும் என் இதயத்தில்” என அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

“>

ஒரு சாதாரணப் பேருந்து ஓட்டுநராக இருந்து, இன்று உலகின் நம்பர் 1 கிரிக்கெட் அணியின் வெற்றியில் அங்கமாக மாறியுள்ள நுவானின் இந்த வாழ்க்கைப்பயணம் பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது. இதற்காக பிசிசிஐ அறிவித்துள்ள மெகா பரிசுத் தொகையில் ஒரு பகுதி நுவானுக்கும் வழங்கப்படவுள்ளது.

இந்திய பேட்ஸ்மேன்களின் பலவீனங்களைக் கண்டறிந்து அவர்களைப் பயிற்சி மூலம் பலப்படுத்திய இந்த இலங்கை வீரரை, இந்திய ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.